
கோலாலம்பூர், ஜன 23 – மலேசியஇந்துப் பெருமக்களால் கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச நன்னாளுக்கு கெடா மாநில அரசு பண்டிகை கால சிறப்பு விடுமுறையை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும், ஆண்டுக்கு ஆண்டு சிறப்பு விடுமுறையாக அறிவிக்காமல் நிரந்தரமாக மாநில அரசு விடுமுறையாக அறிவிக்கும்படி மந்திரிபெசார் டத்தோஸ்ரீ முகமட் சனூசி தலைமையிலான பாஸ் அரசாங்கத்தை ம.இ.கா கேட்டுக் கொள்வதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கூறியுள்ளார்.
கெடா அரசின் தற்போதைய பண்டிகை கால சிறப்பு விடுமுறையை ம.இ.கா மனமுவந்து வரவேற்பதாகவும் அதேசமயம், பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்வதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வடக்கில் உள்ள கெடா மாநிலத்தை பாஸ் கட்சி ஆட்சி செய்தாலும் இந்துக்களின் பாரம்பரிய பண்டிகைக்கு சிறப்பு விடுமுறை அளித்திருப்பது மிகவும் பாராட்டிற்கு உரியது. கடந்த காலத்திலும் இதே அரசாங்கம் இதைப் போல செய்துள்ளது.
மலேசியாவில் வாழ்கின்ற மக்கள் பல இன, பல சமய, பல பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட கூட்டு சமுதாயமாகும். இத்தகைய சமுதாயத்தில், சமய நல்லிணக்கம் மிகமிக அவசியம்.
அதை நிலைநாட்டும் வகையில் பாஸ் கட்சி தலைமையிலான கெடா மாநில அரசாங்கம், இந்துக்களின் தைப்பூச நன்னாளிற்கு சிறப்பு விடுமுறை அளித்து இருப்பது, கெடா மாநில இந்திய சமுதாயத்தால், குறிப்பாக இந்து சமய மக்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது.
தைப்பூச விழாவைப பொருத்தவரை மலேசியாவில் இது ஒரு சமய பண்டிகை என்பதைக காட்டிலும் பன்னாட்டு சுற்றுப்பயணிகளை கவரக்கூடிய விழாவாகவும் ஆண்டுதோறும் அமைகிறது என விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.