ஜெலி, அக்டோபர்-20, பேராக், கெரிக் மற்றும் கிளந்தான் பத்து மெலிந்தாங்கில் 3 நாட்கள் இடைவெளியில் இருவரை அடித்துக் கொன்றதாக நம்பப்படும் புலி, நேற்று கூண்டில் பிடிபட்டது.
அந்த எல்லைப் பகுதியில் கிளந்தான் வனவிலங்குத் துறை வைத்த 2 கூண்டுகளில் ஒன்றில், 8 முதல் 10 வயதிலான அந்த ஆண் புலி சிக்கியது.
இதையடுத்து விரைவிலேயே பேராக், சுங்காயில் உள்ள தேசிய வனவிலங்கு மீட்பு மையத்திற்கு (NWRC) அப்புலி அனுப்பப்படுமென, கிளந்தான் வனவிலங்குத் துறையின் இயக்குநர் மொஹமட் ஹஃபிட் ரொஹானி (Mohamad Hafid Rohani) தெரிவித்தார்.
பத்து மெலிந்தாங் மிளகாய் தோட்டத்தில் மியன்மார் ஆடவரை அடித்துக் கொன்றதை அடுத்து, அப்புலியைப் பிடிக்க அக்டோபர் 17-ஆம் தேதி பொறி வைக்கப்பட்டது.
இந்நிலையில் முன்னதாக கெரிக்கில் உள்ளுர் ஆடவரை கடித்துக் குதறியதும், பிடிபட்ட இதே புலி தானா என்பதை தாங்கள் விசாரித்து வருவதாக மொஹமட் ஹஃவிட் சொன்னார்.
சம்பவம் நிகழ்ந்த இரு இடங்களுக்கும் இடையிலான தூரம் வெறும் 3 கிலோ மீட்டர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.