கெரிக், அக்டோபர்-16, பேராக், கெரிக்கில் மனைவியின் கண்ணெதிரே கணவனை புலி அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
JRTB எனப்படும் கெரிக்-ஜெலி கிழக்கு மேற்கு சாலையின் 79.2-வது கிலோ மீட்டரில், தொழிலாளர்கள் தங்கும் ரூமா கோங்சி வீட்டருகே நேற்று அதிகாலை அச்சம்பவம் நிகழ்ந்தது.
கணவர் காலை 5 மணிக்கு வீட்டுக்கு வெளியேயுள்ள கழிவறைக்குச் சென்ற போது, புலி உறுமும் சத்தம் கேட்டது;
சந்தேகத்தில் கதவைத் திறந்த போது, கணவரை புலி புதருக்குள் இழுத்துச் செல்வதை கண்டதாக, தாய்லாந்து நாட்டவரான அவரின் மனைவிக் கூறினார்.
தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த போலீசும் வனவிலங்குத் துறையும் நண்பகல் வாக்கில், வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் 54 வயது அந்த உள்ளூர் ஆடவரின் உடலைக் கண்டெடுத்தது.
இடது காலிலும் கழுத்திலும் படுகாயமேற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டது.
இவ்வேளையில் அச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட பகுதிக்கு பேராக் வனவிலங்கு (PERHILITAN) அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.
உண்மையிலேயே புலி தான் அடித்துக் கொன்றதா அல்லது வேறு காட்டு விலங்குகள் தாக்கியதா என்பதை கண்டறிய வேண்டியிருப்பதாக, பேராக் PERHILITAN இயக்குநர் சொன்னார்.