கெரிக், ஏப்ரல் 15 – பேராக், கெரிக்–ஜெல்லி சாலையில், சில வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான, 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று மடிந்ததை, மாநில பெர்ஹிலிடன் – தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு துறை உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்றிரவு, கிளந்தானில் இருந்து கெரிக் நோக்கி பயணமான நிசான் எக்ஸ்-டிரெயில் ரக வாகனம் அந்த யானையை மோதித் தள்ளியது.
சம்பவ இடத்தை சென்றடைந்த போது, திடீரென சாலையைக் கடந்த யானையை தவிர்க்க முடியாமல் அவ்விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
அவ்விபத்தில், SUV ஓட்டுனர் மற்றும் அதிலிருந்த பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
எனினும், யானையை மோதியதன் விளைவாக குறைந்தது இரு வாகனங்கள் சேதமடைந்தன.
முன்னதாக, வாகனம் மோதி மடிந்த யானை, சாலையில் கிடக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.