கேமரன் மலை, அக்டோபர் 8 – கேமரன் மலையில், சுங்கை ரூயில் (Sungai Ruil), தானா ரத்தாவில் (Tanah Rata), நேற்று பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகளிலிருந்து, பூர்வக்குடியினர் உட்பட 5 குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் என மொத்த 31 பேர் தற்காலிக நிவாரண மையத்தில் தஞ்சமடைந்தனர்.
நேற்று மாலை 3 மணியளவில் தொடங்கிய மழையால் சுங்கை ரூயிலுக்கு அருகிலுள்ள தாழ்வான பகுதிகள் உட்பட, பூர்வக்குடியினர் மீள்குடியேற்றத் திட்டத்தின் நுழைவாயில் பகுதிகளிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
அருகிலுள்ள மலைகளிலிருந்தும் சேறு சகதிகள் பிரதான சாலையை மூடியுள்ளன.
எனினும், வெள்ள நீர் வடிந்துவரும் நிலையில், துப்பரவு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இச்சம்பவத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.