
கேமரன் மலை, ஆக 30 – கேமரன் மலை புளு வேலி தமிழ்ப்பள்ளியை திறப்பதற்கான சான்றிதழ் கடிதத்தை கல்வி அமைச்சு வழங்கியதைத் தொடர்ந்து அப்பள்ளியில் மாணவர்கள் தங்களது கல்வியை தொடங்கினர். 63 லட்சம் ரிங்கிட் செலவில் கட்டப்பட்ட அப்பள்ளியில் கணினி அறை, ஆசிரியர் அறை உட்பட பல்வேறு நவீன வசதிகளை கொண்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு அந்த புதிய பள்ளியின் 4 மாடி கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு 2020-ஆம் ஆண்டு முழுமையடைந்தது. வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கு முன்கூட்டியே இப்பள்ளி திறக்கப்பட்டதாக அதன் மேலாளர் வாரியத்தின் பொருளாளர்
ரெங்கசாமி கருப்பண்ணன் தெரிவித்தார்.
38 மாணவர்கள், தலைமையாசிரியர் உட்பட 10 ஆசிரியர்களுடன் செயல்படத் தொடங்கிய புளு வேலி தமிழ்ப்பள்ளி திறக்கப்பட்டது மாணவர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் ரெங்கசாமி தெரிவித்தார். புதிய ஆண்டில் மேலும் அதிகமான மாணவர்கள் இப்பள்ளியில் பதிவு செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.