Latest

கைதான 3ஆவது நாளில் குமார் மரணம் 2 மாதங்களாக குடும்பத்தினர் அலைக்கழிப்பு

புக்கிட் மெர்தாஜம், ஜன 5 – கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் இருந்த மூன்றாவது நாளில் குமார் செல்வதுரை இறந்த விவகாரத்தைக்கூட கூறாமல் சுமார் இரண்டு மாத காலம் அவரது குடும்பத்தினரை அலைக்கழித்த போலீசாரின் அனுகுமுறையை செபெராங் பிறை கவுன்சிலர் டேவிட் மார்ஷல் சாடினார். குமார் மரணம் அடைந்த விவகாரத்தை அவரது குடும்பத்தினரிடம் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு தெரிவிக்காமல் இருந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விளக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

திருட்டு விவகாரம் தொடர்பில் 35 வயதுடைய குமார் செல்வதுரை மேலும் இருவருடன் டிசம்பர் 10 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். குமாருடன் கைது செய்யப்பட்ட இருவர் விடுவிக்கப்பட்டதை அறிந்த அவரது குடும்பத்தினர் தொடர்ந்து குமாரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் குமார் காணமல்போன விவகாரம் தொடர்பில் அவரது குடும்பத்தின்ர் பட்டர்வெர்த் போலீஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் செய்யச் சென்றனர். அப்போதுதான் டிசம்பர் 13ஆம் தேதியன்று குமார் இறந்துவிட்ட தகவலை அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மறுநாள் குமாருக்கு வலிப்பு ஏற்பட்டதால் அவர் கெப்பாளா பத்தாஸ் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதகவும் அங்கிருந்தது செபராங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் மாரடைப்பினால் இறந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதோடு குமாரின் உடலை யாரும் பெற்றுக்கொள்ள வராத நிலையில் பெயர் குறிப்பிடப்படாத அரசு சார்பற்ற இயக்கத்திடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டதாகவும் போலீசார் கூறியிருப்பது குறித்தும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குமார் மரணம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும் என டேவிட் மார்ஷல் தெரிவித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை எதற்காக போலீசார் விடுதலை செய்தனர். இப்போது குமாரின் உடல் எங்கிருக்கிறது. குமாரின் இறுதிச் சடங்கிற்காக அவரது உடலை ஒப்படைக்கும்படி அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார் என்றும் டேவிட் மார்ஷல் கூறினார். குமார் உடல் நலமின்றி மருத்துவமனையில் இருந்தது குறித்து அவரது குடும்பத்திடம் போலீஸ் ஏன் அறிவிக்கவில்லை. குமாருக்கு என்ன நடந்தது என்பதை அறிவிப்பதற்கு எதற்கு 50 நாட்களை போலீசார் எடுத்துக்கொண்டனர் என்பது குறித்தும் போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனிடையே குமாரின் சகோதரர் தினேஸ் இன்று புக்கிட் மெர்தாஜம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததோடு குமார் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!