
கோலாலம்பூர், செப்டம்பர் 12 – திருமண நிகழ்ச்சியின் போது, தமக்கு கிடைத்த வித்தியாசமான, அதே சமயம் வேடிக்கையான அனுபவத்தை, @jihaaaa98s எனும் புதுமணப் பெண் ஒருவர் தமது சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
அப்படி என்ன தான் வித்தியாசமாக நடந்தது என கேட்குறீர்களா?
கையால் வரையப்பட்ட இரு 20 ரிங்கிட் நோட்டுகளை திருமண அன்பளிப்பாக அவர் பெற்றது தான் அந்த வித்தியாசமான அனுபவம் ஆகும்.
அந்த நோட்டுகள் போலியானவை என்றாலும், அதனை உருவாக்க சம்பந்தப்பட்ட நபர் உண்மையில் பெரிய முயற்சியை மேற்கொண்டுள்ளார் என்றே கூற வேண்டும் என்கிறார் அப்பெண்.
திருமணத்திற்கு வருகை புரிந்தவர்கள், எவ்வளவு “மொய்” அன்பளிப்பு தொகையை வழங்கினார்கள் என எண்ணிக் கொண்டிருந்த போது, அந்த நோட்டுகள் தமது கண்ணில் பட்டதாக, அப்பெண் பதிவிட்டுள்ளார்.
வெற்று கடித உரை அல்லது “ஆங்பாவ்” உரை மோசமானது என நீங்கள் எண்ணினால், இது அவற்றை காட்டிலும் இன்னும் மோசமானது என தமது காணொளியின் கீழ் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.
கையால் வரையப்பட்ட அந்த நோட்டுகளை பார்த்து இணையப் பயனர்கள் பலர் திகைப்பை வெளிப்படுத்தினாலும், “எண்ணம் தான் முக்கியம். அது போலி நோட்டுகளாக இருந்தாலும், புதுமணத் தம்பதிக்கு அன்பளிப்பு வழங்க வேண்டும் எனும் சம்பந்தப்பட்ட நபரின் எண்ணத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும்” என ஒருவர் நேர்மறையான கருத்தை பதிவிட்டுள்ளார்.
“எனக்கு அந்த நோட்டுகள் கிடைத்திருந்தால், அதனை நான் “பிரேம்” இட்டு ஞாபக சின்னமாக மாட்டி வைத்திருபேன். நிஜமாகவே மிகவும் ஆக்கப்பூர்வமான ஓவியம் அவை” என மற்றொருவர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.