
பிராவிடன்ஸ், செப்டம்பர் 14 – இங்கிலாந்து, ரோட் (Rhode) தீவைச் சுற்றி, முக்குளிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரு “ஸ்கூபா டைவர்கள்” கையுறையில் சிக்கி தவித்த, சுறா மீன் குட்டியை விடுவித்தனர்.
சம்பவத்தின் போது, அந்த அமெரிக்க ஜோடி, சுமார் 40 சென்டிமீட்டர் நீளமுள்ள சுறா ஒன்று கையுறையிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவிப்பதைக் கண்டுள்ளனர்.
முதலில் அந்த மீன் இறந்து விட்டதாக, அதில் பெண் ஸ்கூபா டைவர் எண்ணியுள்ளார். எனினும், அருகில் சென்ற போது, அது தப்பியோடுவதை போல அசைந்ததை கண்டு அதற்கு உதவ அவர் முற்பட்டார்.
உடனடியாக, தனது கணவரை அழைத்த அந்த பெண், சுறா மீனின் தலைப் பகுதியில் சிக்கிக் கொண்டிருந்த கையுறையை பல முறை பிடித்து இழுத்து அதனை விடுவித்தனர்.
எனினும், அந்த மீனுக்கு உதவும் போது, பெரிய சுறா தாக்கக்கூடும் எனும் அச்சத்தில் மிகவும் கவனமாக செயல்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
“கையுறையிலிருந்து விடுபட்ட அந்த குட்டி சுறா தப்பியோடி, எங்கள் பார்வையிலிருந்து மறைந்தது” எனவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம், நீருக்கடியில், தாங்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கு உதவுவது இது முதல் முறை அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.