கோத்தா பாரு, பிப் 16 – சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடினின் கடைசி மகன் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியிருக்கிறது.
பொறுப்பற்ற சில தரப்பினர், கைரியின் மகனுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பாக, ஊசியிலிருந்து தடுப்பு மருந்து வெளியேற்றப்பட்டதாக, பொய் தகவலை பரப்பியுள்ளனர்.
அதையடுத்து, தடுப்பூசி விவகாரத்தில் சில தரப்பினர் எப்படியாவது குறையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருப்பார்கள் என, சுகாதார துணையமைச்சர் டத்தோ டாக்டர் நூர் அஸ்மி கசாலி கூறியுள்ளார்.
நம்பிக்கையில்லையென்றால், கைரியின் மகனுக்கு தடுப்பூசி போட்ட மருத்துவ பணியாளரை அழைத்து தெளிவு பெறலாமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வேளையில், அந்த தடுப்பூசியைப் போட்ட மருத்துவ பணியாளர், காணொளி ஒன்றை வெளியிட்டு, கைரியின் மகனுக்கு முறையாக தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக விளக்கம் தந்திருக்கிறார்.