கோலாலம்பூர், ஆகஸ்ட்-13 – கொரியரில் வரும் பொட்டலங்கள் ஒருவேளை சந்தேகத்திற்குரியவையாகவே இருந்தாலும் கூட, கொரியர் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் பணம் கேட்க முடியாது.
மாறாக போலீசில் தான் அவை புகார் செய்ய முடியும்.
தடைச் செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் கண்டறியப்பட்டால், வாடிக்கையாளர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்து, பின்னர் அதே அழைப்பில் ‘போலீஸ்காரர்’ அறிவுரை கூறுவதெல்லாம் நடைமுறையில் இல்லாத ஒன்று.
எனவே அது போன்று கூறிக்கொண்டு அழைப்பேதும் வந்தால் அது மோசடியே; யாரும் நம்பி ஏமாற வேண்டாமென புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ ரம்லி மொஹமட் யூசோஃப் (Datuk Seri Ramli Mohamed Yusof) தெரிவித்தார்.
தடைச் செய்யப்பட்ட பொருள் கொரியரில் வந்திருப்பதாகவும், அதனை விடுவிக்க குறிப்பிட்ட பணத்தை transfer செய்ய வேண்டுமென்றும் கூறி பொது மக்களுக்கு அடிக்கடி கைப்பேசி அழைப்புகள் வருவது குறித்து அவர் கருத்துரைத்தார்.
நாட்டில் 2021-ஆம் ஆண்டிலிருந்து கடந்த மாதம் வரை அத்தகைய 9,422 கைப்பேசி அழைப்பு மோசடிகள் (Phone scam) மேற்கொள்ளப்பட்டு, அவற்றின் வாயிலாக கோடிக்கணக்கில் நட்டமேற்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக 2022 முதல் இவ்வாண்டு ஜூலை வரை Pos Laju அதிகாரி என ஆள்மாறாட்டம் செய்து மேற்கொள்ளப்பட்ட மோசடியில் 3 கோடி ரிங்கிட்டுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டதாக அவர் சொன்னார்.