
குவாலா சிலாங்கூர் செப்டம்பர் 8 – ஜாலான் கிள்ளான் – சபாக் பெர்னாம் சாலையில், சுங்கை தெராப் பள்ளிக்கு அருகில், இரசாயனத்தை ஏற்றிச் சென்ற கொள்கலன் லோரி ஒன்று கவிழ்ந்து கிடப்பதால், இருவழி பாதையிலும் பயணத் தடை ஏற்பட்டுள்ளது.
பின்னிரவு மணி 1.30 வாக்கில் நிகழ்ந்த அவ்விபத்தால், எட்டு மணி நேரத்திற்கும் கூடுதலாக அந்த பயணத் தடை நீடிக்கிறது.
எனினும் இன்று காலை மணி பத்து வாக்கில், கிள்ளானிலிருந்து சபாக் பெர்னாம் நோக்கிச் செல்லும் ஒருவழி பாதை மட்டும் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது.
இதர சாலைகள் இன்னும் மூடப்பட்டுள்ளதோடு, கொள்கலனை அப்புறப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால், வாகனமோட்டிகள், ஜாலான் சுங்கை தெராப் – லோரோங் 7 – லோரோங் 5 ஆகிய மாற்றுச் சாலைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்நிலையில், விபத்துக்குள்ளான 44 வயது கொள்கலன் லோரி ஓட்டுனர், பாதுகாப்பாக மீட்கப்பட்டதை, சிலாங்கூர் மாநில தீயணைப்பு மீட்புப் படையின் இயக்குனர் வான் மாட் ரஸாலி வான் இஸ்மாயில் உறுதிப்படுத்தினார்.
அதோடு, இரசாயனக் கசிவால் ஆபத்தான சூழல் எதுவும் ஏற்படவில்லை எனவும், துப்புரவு பணிகளும், கொள்கலனை அகற்றும் பணிகளும் ஒருங்கே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.