
கோலாலம்பூர், மார்ச் 8 – சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது தமக்கு பாதி மரணத்தை ஏற்படுத்தும் அளவிற்கு தாக்கிய தனிப்பட்ட நபரைக்கூட பொறுத்துக்கொண்டு மன்னித்துவிட்டேன். ஆனால் கோடி கோடியாக பணத்தை கையாடிவர்களை மன்னிக்கும் அதிகாரம் தம்மிடம் இல்லையென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
நாட்டின் வருமானத்தை அபகரித்தைவர்களை மன்னிப்பதற்கு தமது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என்றும் அவர் கூறினார். கடந்த காலத்தின் அனைத்து தவறுகளை எல்லாம் தோண்டி எடுத்து அவற்றை அம்பலப்படுத்த நான் விரும்வில்லை. ஆனால் அரசாங்கத்திற்கு சொந்தமான பணத்தை கையாடியவர்கள் அவற்றை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என விரும்புவதாக விஸ்மா புத்ராவில் மலேசிய அரசதந்திர பேராளர் அலுவலகத்தின் தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசியபோது அன்வார் வலியுறுத்தினார் .