கோத்தா கினபாலு. ஆக 5 – போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்களை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் 667,729 ரிங்கிட் மதிப்புடைய 20 கிலோவுக்கும் மேற்பட்ட ஷாபு போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த அந்த இரண்டு இளைஞர்களும் போதைப் பொருளுடன் தனித்தனியாக விமானத்தின் மூலம் கோத்தா கினபாலு சென்றடைந்ததாக நம்பப்படுகிறது. 18 மற்றும் 29 வயதுடைய அந்த இரண்டு ஆடவர்களும் விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக கைது செய்யப்பட்டதாக சபா சுங்கத்துறை உதவி இயக்குனர் சித்தி மாங் ( Siti Mang ) தெரிவித்தார்.
முதல் சந்தேகப் பேர்வழி நண்பகல் 12 .30 மணியளவில் தாவாவ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட வேளையில் இரண்டாவது சந்தேகப் பேர்வழி நண்பகல் 1.30 மணியளவில் கோத்தா கினபாலு விமான நிலையத்தில் இருந்து வெளியேற முற்பட்டபோது கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். 1952ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் கீழ் அந்த இருவரும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.