
ஷா அலாம், நவ 6- இம்மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு கோத்தா கெமுனிங் தொகுதி சேவை மையம் ஏற்பாடு செய்த தீபாவளி பொது உபசரிப்பில் 700க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். ஷா அலாம் செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடா, மைடின் பேரங்காடி கார் நிறுத்துமிடத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வை கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் S. பிரகாஷ் தலமையிலான குழுவினர் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பொது உபசரிப்பில் சிலாங்கூர் சட்டமன்ற சபாநாயகர்லாவ் வெங் சான், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு டமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் , செனட்டர் சிவராஜ் சந்திரன், முன்னாள் செனட்டர் சுரேஸ் சிங், நகரான்மைக் கழக உறுப்பினர்கள் மற்றும் இந்திய சமூக தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பரத நாட்டியம் உட்பட நடனங்கள், மற்று பல கலைஞர்களின் பாடல்களும் இடம் பெற்றன மற்றும் பொருட்களை வாங்குவதற்கான பற்றுச் சீட்டுக்களும் வழங்கப்பட்டன. நிகழ்சியில் அதிர்ஷ்ட குலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த தீபாவளி பொது உபசரிப்பில் மூவின மக்களும் கலந்துகொண்டது குறித்து சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய சிலாங்கூர் மாநில DAP தலைவருமான கோபிந்த் சிங் அடிக்கடி வெள்ளம் ஏற்படும் பகுதியில் கோத்த கெமுனிங் தொகுதி இருப்பதால் சட்டமன்ற உறுப்பினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் இருப்பதாக தெரிவித்தார். மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் ஒன்றுமை அரசாங்கத்தின் ஆட்சியில் இருப்பதால் வெள்ளம் உட்பட பல பிரச்சனைகளுக்கு மத்திய அரசாங்கத்தின் உதவியோடு தீர்க்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.