
கோலாலம்பூர், ஜூன் 2 – கோபியோ எனப்படும் மலேசிய இந்தியர் வம்சாவளி அமைப்பின் அனைத்துலக கலாச்சார விழா இன்று பிரிக்பில்ட்ஸ் விவேகானந்த ஆசிரமத்தில் தொடங்கியது. மனித வள அமைச்சர் வி.சிவக்குமார் இந்த நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
GOPIO மலேசியாவின் சிந்தனைமிக்க முயற்சிகளை அவர் பாராட்டியதோடு . மலேசியா என்ற இந்த தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இந்திய வம்சாவளியினரின் தியாகத்தை அங்கீகரிப்பதே இந்த தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆண்டு இந்தியா-மலேசியா இடையேயான இருதரப்பு உறவின் 65ஆவது ஆண்டைக் குறிக்கிறது. இந்த உறவு, சமூக மற்றும் பொருளாதார ரீதியில் நமது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை பலப்படுத்திய பல முயற்சிகளை செதுக்கியுள்ளது என சிவக்குமார் தெரிவித்தார்.கோபியோ தலைவர் குணசேகரன் தலைமையில் இந்த விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் இந்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் வி. முரளிதரன், மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என். ரெட்டி, தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்தின் தலைமை இயக்குநர் டத்தோ சகாதேவன், மலேசிய தெலுங்கு சங்கத்தின் துணைத் தலைவர் சத்யா சுதாகரன், ஜெயா பக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு. செல்வராஜ், டத்தோ டாக்டர் அட்சயக்குமார், டத்தோ தமிழ்ச் செல்வம் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.