ஈப்போ, ஏப் 5 – கோப்பேங்கிற்கு அருகே வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 307ஆவது கிலோமீட்டரில் லோரியின் பின்னால் வாகனம் ஒன்று மோதியதைத் தொடர்ந்து இரு லோரிகளின் உதவியாளர்கள் மரணம் அடைந்தனர். வங்காளதேசத்தை சேர்ந்த 26 மற்றும் 29 வயதுடைய அந்த இரண்டு நபர்களும் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்ததாக பேரா தீயணைப்பு மீட்புத்துறையின் நடவடிக்கை அதிகாரி Mohd Hamidi Manas தெரிவித்தார்.
இன்று விடியற்காலை மணி 5.55 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் 36 வயதுடைய லோரி ஓட்டுனர் ஒருவருக்கு கை உடைந்தது. மாவுகளை ஏற்றிச் சென்ற 57 வயதுடைய டிராய்லர் ஓட்டுனருக்கு காயம் அடையவில்லை. தீயணைப்பு மீட்புக் குழுவினர் அங்கு சென்றபோது மூன்று டன் லோரியின் உதவியாளர்கள் அந்த லோரியில் சிக்கிக் கொண்டனர். அவர்களது உடல் மீட்கப்பட்ட பின் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டதாக Mohd Hamidi Manas தெரிவித்தார்.