
கோலாலம்பூர், மார்ச்-24 – ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரத்திற்கு இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில், மசூதியின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் பங்கேற்பது சரியாக இருக்காது.
ஒன்று அவர் அதில் பங்கேற்கக் கூடாது அல்லது கோயில் விவகாரம் தீரும் வரை அடிக்கல் நாட்டு விழாவை ஒத்தி வைக்குமாறு Jakel குழுமத்தை அவர் கேட்டுக் கொள்ள வேண்டும்.
தேசிய முன்னணி காலத்து சட்டத் துறை அமைச்சரான டத்தோ சாயிட் இப்ராஹிம் அவ்வாறு ஆலோசனைக் கூறியுள்ளார்.
இதுவே, கோயில் நிலத்தில் நூற்றாண்டு கால மசூதி இருந்து, நில உரிமையாளர் அங்கு கோயிலைக் கட்ட அடிக்கல் நாட்டினால் பிரதமர் அங்கு செல்வாரா என சாயிட் கேள்வி எழுப்பினார்.
கோயில் இடமாற்றம் தொடர்பில் இன்னமும் பேச்சுவாத்தைகள் நடைபெற்று வருகின்றன.
ஒரு பக்கம் சுமூகத் தீர்வைப் பற்றி பேசிவிட்டு, மறுபக்கம் அடிக்கல் நாட்டில் பங்கேற்றால் அது டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அழகாக இருக்காது.
இந்துக்களின் மனமும் புண்படும்.
பிரதமராக இருப்பவர் அதற்கு இடமளிக்கக் கூடாது என்பதே தமது கருத்து என சாயிட் சொன்னார்.
இது தவிர அந்த உத்தேச மசூதிக்கு ‘மடானி’ என பெயரிடுவதும் பொருத்தமாக இருக்காது; காரணம், மடானி என்பது அன்வார் அரசாங்கத்தின் சுலோகம், கொள்கை, அடையாளம் எல்லாமே…
எனவே ‘மடானி மசூதி’ என பெயர் வைத்தால், அதன் கட்டுமானத் திட்டத்தின் பின்னணியில் இருப்பதே மடானி அரசாங்கம் தான் என்ற தோற்றத்தை தந்து விடும்.
ஆக மடானிக்குப் பதிலாக வேறு ஏதாவது பெயரை Jakel வைத்துக் கொள்ளட்டுமே என்றார் அவர்.
அனைத்து மலேசியர்களுக்கும் நியாயமானப் பிரதமராக டத்தோ ஸ்ரீ அன்வார் நடந்துகொள்ள வேண்டுமென, The Deep Thinker போட்காஸ் பேட்டியில் சாயிட் கூறினார்.
மார்ச் 27-ஆம் தேதி Jakel ஏற்பாடு செய்துள்ள மடானி மசூதியின் அடிக்கல் நாட்டு விழாவில் டத்தோ ஸ்ரீ அன்வார் பங்கேற்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மசூதிக் கட்டுமானத்திற்கான தங்களின் கடப்பாட்டை உறுதிச் செய்யும் ஓர் அடையாளமே அந்த அடிக்கல் நாட்டு விழா அன்றி வேறொன்றும் இல்லை என Jakel குழுமத் தலைவர்கள் முன்னதாகக் கூறியிருந்தனர்.