புத்ராஜெயா, மே 7 – குவாலா குபு பாருவில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வீடமைப்பு ஊராட்சி அமைச்சர் ங்கா கோர் மிங் வெளியிட்டுள்ள நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பில், கையூட்டு அம்சம் எதுவும் உள்ளதா என்பதை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆய்வு செய்யும்.
அந்த அறிவிப்பு தொடர்பில், ஊழல் தடுப்பு ஆணையம் இன்னும் எந்தவொரு விசாரணை அறிக்கையையும் திறக்கவில்லை.
எனினும், ஊடகங்களில் வெளியான செய்திகள் வாயிலாக, அவ்விவகாரத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அறிந்துள்ளதாக, அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
முன்னதாக, குவாலா குபு பாருவில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீட்டை அறிவித்திருக்கும் அரசாங்கத்தின் செயலை, அரசாங்க சார்பற்ற அமைப்பான டிண்டாக் மலேசியா (Tindak Malaysia) கடுமையாக விமர்சித்து இருந்தது.
குவாலா குபு பாருவில் இடைத்தேர்தல் நடைபெறும் சமயத்தில், ங்கா கோர் மிங் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பு ஏற்புடையது அல்ல என்பதோடு, தவறான நடவடிக்கை என டிண்டாக் மலேசியா குற்றம்சாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.