புத்ராஜெயா, செப்டம்பர் -2, கோலாலம்பூரில் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களுக்கும் நில மேம்பாட்டாளர்கள் இனி புவி தொழில்நுட்ப ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
3 பிரிவுகளுக்கான விண்ணப்பங்களை உட்படுத்தியுள்ள அப்புதிய விதிமுறை உடனடியாக அமுலுக்கு வருவதாக, கோலாலம்பூர் மேயர் டத்தோ ஸ்ரீ Dr மைமூனா மொஹமட் ஷாரிஃப் (Datuk Seri Dr Maimunah Mohd Sharif) தெரிவித்தார்.
ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட ஆனால் நில மேம்பாட்டு ஆணை இன்னமும் ஒப்படைக்கப்படாத விண்ணப்பங்கள், இன்னமும் பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்கள், புதிய விண்ணப்பங்கள் ஆகியவைவே அம்மூன்று விண்ணப்பப் பிரிவுகளாகும்.
புவி தொழில்நுட்ப அறிக்கை என்பது ஒரு கட்டுமானம் திட்டமிடப்பட்ட நிலத்தடியின் நிலைமைகள் பற்றிய விரிவான ஆய்வாகும்.
கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நில அமிழ்வில் சிக்கி இந்தியப் பிரஜை காணாமல் போன சம்பவத்தை அடுத்து, அந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சில தினங்கள் கழித்து சம்பவ இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் இன்னொரு நில அமிழ்வு ஏற்பட்டதால் மக்களிடையே ஒரு வித பீதி ஏற்பட்டது.
இதனிடையே நில அமிழ்வு பகுதியைப் பழுதுப் பார்க்கும் பணிகள் நிறைவடைய 3 முதல் 6 மாதங்கள் பிடிக்கலாம்.
அதுவரை DBKL-லின் பாதுகாப்பு உத்தரவுகளைப் பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைத்திட வேண்டுமென்றும் டத்தோ ஸ்ரீ மைமூனா கேட்டுக் கொண்டார்.