கோலாலம்பூர், செப்டம்பர் -5, Sprint நெடுஞ்சாலையில் நேற்று காலை Perodua Axia கார் திடீரென தன் பக்கம் திரும்பியதால், மோட்டார் சைக்கிளோட்டி பரபரப்பான தருணத்தை எதிர்கொண்டார்.
அந்த பரபரப்பான காட்சிகள் @Aurizn என்ற முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
முன்னே சென்ற Perodua Myvi-யும் Axia-வும் மோதிக் கொண்ட போது, அச்சம்பவம் நிகழ்ந்தது.
Myvi-யின் பின்பகுதியை மோதி, Axia திடீரென நடுப்பாதையில் திரும்பியதால், அவர் பாட்டுக்குச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டி தூக்கி வீசப்பட்டு சாலை காங்கிரீட் தடுப்புச் சுவரில் மோதி விழுந்தார்.
அவர் உயிர் பிழைத்ததாக நெடுஞ்சாலை தரப்பு உறுதிச் செய்தது; என்றாலும் அவருக்கு ஏற்பட்ட காயம் எந்தளவுக்கு மோசம் என்பது தெரியவில்லை.
கடைசியாகப் பார்த்த வரைக்கும், போலீஸ் தரப்பிலிருந்து அறிக்கை எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், சாலையில் பயணிக்கும் போது வாகனமோட்டிகள் எந்த அளவுக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்கு, இச்சம்பவம் மற்றோர் எடுத்துக்காட்டு என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.