கோலாலம்பூர், மே-10, தலைநகரின் பிரபல Yap Kwang Seng சாலையில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியொன்றில் வியாழக்கிழமை அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், அங்கு தீ ஏற்பட்டது.
அக்கேளிக்கை மையத்திற்கு அருகில் CCTV கேமராவில் பதிவான 45 வினாடி காணொலி முன்னதாக வைரலானது.
2 மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு மர்ம நபர்கள், சம்பந்தப்பட்ட கேளிக்கை மையத்திற்கு வெளியே அவற்றை நிறுத்தி விட்டு, 2 பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பியோடுவது அக்காணொலியில் தெரிகிறது.
வைரலான மற்றொரு காணொலியில், அம்மையம் தீப்பற்றி எரிவதையும், பொது மக்கள் தீயை அணைக்கப் போராடுவதையும் காண முடிகிறது.
சேத விவரங்கள் குறித்து உடனடி தகவலேதும் இல்லை.
அச்சம்பவம் குறித்து புகார் கிடைத்திருப்பதை உறுதிப்படுத்திய டாங் வாங்கி மாவட்ட போலீஸ், தீ வைத்து நாச வேலையில் ஈடுபட்டதன் பேரில் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகக் கூறியது.
CCTV பதிவின் உதவியுடன் மர்ம நபர்கள் தேடப்படுகின்றனர்.