
கோலாலம்பூர், ஆக 1 – DLP எனப்படும் இரட்டைக் கல்வி திட்டத்தை குறைக்கும் முடிவினால் கோலாலம்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் தங்களது பிள்ளைகளை
சேர்த்துள்ள பெற்றோர்களைக் கொண்ட குழுவினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். பள்ளி தவணையின் முதல் வாரத்தில் முதல் வகுப்பில் பயிலும் அனைத்து பிள்ளைகளுக்கும் அறிவியல் மற்றும் கணித பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப்படாது என கூறப்பட்டது. தற்போது எங்களது பிள்ளைகள் DLP மற்றும் DLP அல்லாத வகுப்பு என இரண்டு பிரிவாக பிரிக்கப்படுவார்கள் என வாட்சாப் புலனத்தில் கிடைக்கப்பெற்ற தகவலால் குழப்பம் அடைந்துள்ளதாக பெயர் தெரிவிக்காத பெற்றோர் தெரிவித்தனர்.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டில் இரட்டை மொழி பாடத் திட்டம் நடத்தப்படாது என பள்ளிகளுக்கு கோலாலம்பூர் கல்வித்துறை மார்ச் 20 ஆம் தேதி வெளியிடப்பட்ட Whatsup செய்தியில் தெரிவித்திருந்தது. தங்களது பிள்ளைகள் தொடக்கப் பள்ளி காலத்தில் ஆறு ஆண்டுகளிலும் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் பயில்வார்கள் என்று எதிர்பார்த்த பெற்றோர்களுக்கு அந்த செய்தி பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அனைத்து பெற்றோர்களுக்குமே அந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்ததாக மற்றொரு பெற்றோர் தெரிவித்தனர். DLP வகுப்புகளில் இடம்பெறும் மற்றும் DLP வகுப்புகளில் இடம்பெறாத வகுப்பை சேர்ந்த மாணவர்கள் என எந்த மதிப்பீட்டின் பிள்ளைகள் பிரிக்கப்படுவார்கள் என்பதையும் கல்வி அமைச்சு அறிவிக்கவில்லை. இதுகுறித்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கோலாலம்பூர் கல்வித்துறையிடம் விளக்கம் கேட்டபோது இந்த விவகாரம் தங்களது முடிவுக்கு உட்டபட்டதில்லை என்றும் கல்வி அமைச்சின பள்ளி நிர்வாக பிரிவின் கீழ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதையும் அந்த பெற்றோர் சுட்டிக்காட்டினார். உயரிய மதிப்பைக் கொண்ட தலைமுறையை தயார்படுத்துவற்கு DLP வகுப்புக்களை தொடர்ந்து மேம்படுத்துவற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலையிட வேண்டும் என PAGE எனப்படும் கல்விக்கான பெற்றோர் நடவடிக்கை குழுமம் கோரிக்கை விடுத்துள்ளது.