கோலாலம்பூர், நவம்பர்-24, கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பூனையின் கழுத்தில் கயிற்றைக் கட்டி அதைத் தர தரவென ஆடவர் இழுத்துச் சென்ற சம்பவம், மேல் நடவடிக்கைக்காகக் கால்நடை சேவைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி மொஹட் இசா (Datuk Rusdi Mohd Isa) அதனை உறுதிப்படுத்தினார்.
வைரலான பூனை சித்ரவதை வீடியோவைப் பார்த்த ஒருவர் நேற்று மாலை போலீசிடம் புகாரளித்தார்.
இதையடுத்து, 2015 விலங்குகள் நலச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுவதாக அவர் சொன்னார்.
பூனைக்கு நியாயம் கிடைக்க, வீடியோவைப் பதிவு செய்த நபர் முன் வந்து போலீஸ் புகார் செய்ய வேண்டுமென, மலேசிய விலங்குகள் நலச் சங்கத் தலைவர் ஆரி டிவி ஆண்டிகா (Arie Dwi Andika) முன்னதாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அவ்வாறு தகவல் தருவோருக்கு அச்சங்கம் 3,000 ரிங்கிட் சன்மானம் வழங்குமென்றும் அவர் கூறியிருந்தார்.
வைரலான 14 வினாடி வீடியோவில், கயிறு கழுத்தை இறுக்கி பூனை வலியால் துடிப்பதை அந்நபர் கண்டு கொள்ளாமல் அதனை இழுத்துச் செல்கிறார்.
வலி தாங்காது பூனை சிறுநீர் கழித்ததை கண்டு கொதித்த வலைத்தளவாசிகள், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.