கோலாலம்பூர், ஆக 13 – மின்னியல் கழிவு பொருட்களை சட்டவிரோதமாக தயாரித்துவந்த ஏழு நிறுவனங்களில் அதிரடி பரிசோதனை நடத்திய அதிகாரிகள் டத்தோ பிரமுகரான உள்ளூர் வர்த்தகர் ஒருவர் உட்பட 55 பேர் கைது செய்யப்பட்டனர். 30 மற்றும் 50 வயதுக்குட்பட்ட ஒன்பது வெளிநாட்டினர் மற்றும் 45 வெளிநாட்டினர் பஹாங், ஜோகூர், சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் ஆகஸ்டு 5 ஆம்தேதி கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையின்போது 40 மில்லியன் ரிங்கிட் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் நாட்டில் சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த பெரிய அளவிலான மின்னியல் கழிவுப் பொருட்களைக் கொண்ட தொழிற்சாலைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட நடவடிக்கை இதுவாகும் என புக்கிட் அமான் செயலகத்தின் சட்டவிரோத பண பரிமாற்ற பிரிவின் தலைவர் டத்தோ முகமட் ஹஸ்புல்லா அலி (Muhammad Hasbullah Ali) தெரிவித்தார்.
கடந்த ஆண்டு முதல் அந்த தொழிற்சாலைகள் செயல்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலைகளில் மின்னியல் பொருட்களை தீவைத்து வந்ததால் பெரிய அளவில் காற்று தூய்மைக்கேடும் ஏற்பட்டதோடு தீயிலிருந்து வெளியாகும் நச்சுத்தன்மையைக் கொண்ட புகையினால் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டனர். லைசென்ஸ் இன்றி நடத்தப்பட்ட இந்த சட்டவிரோத நிறுவனங்கள் ஆசியாவில் உள்ள பல நாடுகளிலிருந்து மின்னியல் கழிவுப் பொருட்களை வாங்கி வந்ததாக ஹஸ்புல்லா தெரிவித்தார். இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உலோகங்கள் பல லட்சம் ரிங்கிட்டிற்கு வெளிநாடுகளில் விற்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட உள்நாட்டு சந்தேகப் பேர்வழிகள் ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்த தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் என நம்பப்படும் சில தனிப்பட்ட நபர்கள் இன்னும் தேடப்பட்டு வருவதாக முகமட் ஹஸ்புல்லா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.