Latestமலேசியா

கோலாலம்பூரில் PIO இந்திய வம்சாவளி பெருவிழா 2024; கோபிந்த் சிங் தொடக்கி வைப்பு

கோலாலம்பூர், செப்டம்பர் -15 – கோலாலம்பூரில் 2024 PIO புலம் பெயர்ந்த இந்திய வம்சாவளி பெருவிழா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.

உலகளவில் இந்திய வம்சாவளி மக்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் 15-வது ஆண்டாக அவ்விழா நடைபெறுகிறது.

செப்டம்பர் 14 முதல் 16 வரை கோலாலம்பூர் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி மற்றும் அதன் ஆசிரமத்தில் நடைபெறும் இப்பெருவிழாவை, இலக்கயியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

உலகம் முழுவதுமுள்ள இந்திய வம்சாவளியினரின் கலைக் கலாச்சார பரிமாற்றத்துக்கும் வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் இப்பெருவிழா துணைப்புரியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

விழாவின் அடிப்படை நோக்கமே, கலை கலாச்சாரம், சரித்திரம் மற்றும் நம் முன்னோர்கள் எதிர்நோக்கிய சவால்கள், அவர்களின் பங்களிப்பு ஆகியவற்றை நினைவுக் கூர்ந்து கௌரவிப்பதாகும்.

இம்முறை கலை, கலாச்சார,வர்த்தக கண்காட்சிகளுடன் 6 சிறப்பு மாநாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதோடு, புற்றுநோய் பரிசோதனை, இலவச சட்ட ஆலோசனை, சிறுவர்களுக்கான விளையாட்டுகள் என மொத்தம் 23 அங்கங்களும் வருகையாளர்களுக்காக காத்திருக்கின்றன.

தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், சீக்கியர்கள், மாராட்டியர்கள் தொடங்கி மலாக்கா செட்டி சமூகத்தினர் வரை பங்கேற்கவுள்ள இப்பெரு விழாவில் மலேசிய இந்திய வம்சாவளியினரும் திரளாக வந்து பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!