
கோலாலம்பூர், செப் 18 – வினை தீர்க்கும் விநாயகரை வணங்கி எந்த காரியத்தையும் தொடங்கினால் அது தடையின்றி வெற்றியில் முடியும் என்பது இந்துக்களின் ஐதீகம்.
அப்படி சிறப்பு வாய்ந்த விநாயகருக்கான மிக உகந்த நாள்தான் இந்த விநாயகர் சதுர்த்தி.
மலேசிய நாட்டில் மிக பிரபல விநாயக திருத்தளமாக போற்றப்படும் கோலாலம்பூர் கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் ரத ஊர்வலத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நேற்று இரவு தொடங்கியது.
தேவஸ்தான தலைவர் டான் ஶ்ரீ நடராஜா கொடி ஏற்றி தொடக்கி வைக்க; பின்னர் பக்த கோடிகள் புடைச் சூழ நேற்று மாலை மணி 7.30க்கு ஶ்ரீ கணேசரைத் தாங்கி வெளியேறிய தங்க ரதம் நகர் ஊர்வலத்துக்குப் பின் மீண்டும் இன்று அதிகாலை மீண்டும் கோர்ட்டுமலைக்கு வந்தடைந்தது.
அதன் பின்னர் காலையில் சதுர்த்தி பூஜைகள் நடத்தப்பட்டு, இந்த பூஜை இன்று இரவு வரை தொடரவுள்ளதாக டான் ஶ்ரீ நடராஜா தெரிவித்தார்.
இந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு, இடர்கள் நீங்கி தங்களது வாழ்வில் எல்லா செல்வங்களும் பெற்று இன்பமாக வாழ வேண்டிக் கொண்டனர்.
சில ஆலயங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை நாளைதான் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளட்து.