
கோலாலம்பூர், மார்ச் 24 – கோலாலம்பூர்- சிரம்பான் நெடுஞ்சாலையில் சுங்கை பீசி (Sungai Besi) டோல் சாவடிக்கு அப்பால் மேம்பாலத்தின் கீழே உள்ள அவசரப் தடத்தில் மழைக்காக ஒதுங்கிய மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரை நேற்று கார் மோதியதில் அவர் கடுமையாக காயம் அடைந்தார்.
76 வயதான அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பந்தப்பட்ட இந்த விபத்து குறித்த காணொளி நேற்று இரவு மணி 8.40 அளவில் சமூக ஊடகங்களில் வைரலானதாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர், துணை கமிஷனர் முகமட் சம்சுரி முகமட் இசா ( Mohd Zamzuri Mohd Isa ) தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு 40 வயது கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், ஒரு மோட்டார் சைக்கிள் ஒரு கார் பின்னால் இருந்து மோதுவதற்கு முன்பு மழைக்கு ஒதுங்குவதற்காக மேம்பாலத்தின் கீழ் அவசர பாதையில் நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தலையில் பலத்த காயம் அடைந்ததால் சிகிச்சைக்காக கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
1987 ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் 42 ஆவது பிரிவு (1) இன் கீழ் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் Mohd Zamzuri தெரிவித்தார்.