புத்ராஜெயா, ஆகஸ்ட்-18 – சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ, வாடிக்கையாளர்களின் வசதிக்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாநிலங்களில் தனது முகப்பிட சேவை நேரத்தை 1 மணி நேரம் நீட்டிக்கவிருக்கிறது.
சேவையளிப்பு தொடர்பில் பிரதமர் கூறியிருந்த அறிவுரைக்கேற்ப, நாளை முதல் அச்சேவை நீட்டிப்பு அமுலுக்கு வருவதாக, JPJ தலைமை இயக்குநர் ஆயேடி ஃபாட்லி ரம்லி (Aedy Fadly Ramli) தெரிவித்தார்.
கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு ஆகிய மாநிலங்களில் ஒவ்வொரு திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும், ஜோகூரில் ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளிலும் அச்சேவை முகப்பிடங்கள் திறந்திருக்கும்.
மேற்கண்ட நாட்கள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் நிரம்பி வழியும் பரபரப்பான நாட்களாக கருதப்படுகின்றன.
கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த 1 மணி நேர சேவை நீட்டிப்பு, பின்னர் படிப்படியாக மற்ற மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதற்கேற்ப, அரசாங்கச் சேவையளிப்பின் தரமும் உயர வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்ப்பார்கள்.
அந்த நியாயமான எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்யும் வகையில் நடந்துகொள்ளுமாறு, அரசுத் துறைகளை டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாக வலியுறுத்தியிருந்தார்.