புத்ரா ஜெயா, ஆக 15 – கோலாலம்பூர், புடுவிலுள்ள பொழுதுபோக்கு மையத்தில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த சண்டை மற்றும் வன்செயலில் சம்பந்தப்பட்டவர்களில் மேலும் 8 தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 20 முதல் 40 வயதுடைய 12 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ருஸ்டி ஈசா ( Rusdi Isa ) தெரிவித்திருக்கிறார். வர்த்தகம் மற்றும் கடன்கள் காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அங்கு கலவரம் மூண்டதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது அவர் கூறினார். அந்த சம்பவம் தொடர்பாக வன்செயல் மற்றும் துப்பாக்கிச் சூடு என் இரண்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எஞ்சிய சந்தேகப்பேர்வழிகளை நாங்கள் தேடி வருகிறோம். தொடக்கத்தில் அந்த பொழுதுபோக்கு விடுதியில் சில நபர்களுக்கிடையே சண்டை மூண்டது தொடர்பில் ஞாயிற்றுக்கிழமையன்று நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மூன்று தோட்டா உறைகளும், இன்னும் பயன்படுத்தப்படாத இரண்டு தோட்டாக்களும் காணப்பட்டன. இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 148ஆவது விதி மற்றும் 1960 ஆம் ஆண்டின் ஆயுதங்கள் சட்டத்தின் 39 ஆவது விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ருஷ்டி கூறினார்.