கோலா திரங்கானு, ஏப்ரல் 29 – ஆயிரத்து 450 ரிங்கிட்டை கையூட்டாக கேட்டு வாங்கியதாக, “கோர்ப்ரல்” பதவி பகிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக இன்று கோலா திரங்கானு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், 33 வயது முஹமட் அலிப் அப்துல் ஜமால் எனும் அந்த அதிகாரி தமக்கு எதிரான அந்த இரு குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரினார்.
2021-ஆம் ஆண்டு, ஏப்ரல் 17-ஆம் தேதி நவம்பர் 30-ஆம் தேதிகளில், போதைப் பொருள் குற்றம் தொடர்பில், கெமாமான், சுவாய் போலீஸ் நிலையத்தின், “லாக்-அப்பில்” இருந்த முஹமட் பிர்டாவுஸ் முஹமட் சாயிட் எனும் ஆடவனுக்கு, சிறப்பு வசதிகளை செய்து தர, ஜெய்னா முஹமட் அப்துல்லா எண்ற நபரிடமிருந்து ஆயிரம் ரிங்கிட் மற்றும் 450 ரிங்க்கிட்டை கையூட்டாக பெற்றதாக அலிப் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தடுப்புக் காவலில் இருந்த கைதி, தொலைபேசி பயன்படுத்த அனுமதிக்கவும், புகையிலை சப்ளை செய்யவும் ஏதுவாக அலிப் அந்த பணத்தை பெற்றதாக கூறப்படுகிறது.
நான்காயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாததின் பேரிலும் அலிப்பை விடுவிக்க நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
இவ்வழக்கு விசாரணை ஜூன் ஐந்தாம் தேதி செவிமடுக்கப்படும்.