ஜெனிவா, பிப் 10- உலகை அச்சுறுத்திவரும் கோவிட் தொற்றைத் துடைத்தொழிக்க ஏழை மற்றும் வளர்ந்துவரும் நாடுகளுக்கு வல்லரசான நாடுகள் உதவ முன்வர வேண்டும் என WHOஎனப்படும் உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ACT-A எனும் புதிதாக அமல்படுத்தப்பட்ட சுகாதார திட்டத்தின் கீழ் கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான தடுப்பூசிகள், பரிசோதனை பொருட்கள் முதலியவை உலகெங்கும் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அதற்கு கிட்டதட்ட 16 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுவதாகவும் WHOவின் தலைவர் Tedros Adhanom தெரிவித்தார்.
எனவே, பணப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்ட வல்லரசு நாடுகள் சரிசமமாக பகிர்ந்து அந்தத் தொகையை வழங்க முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
துரிதமாக செயல்படுத்தப்படவுள்ள ACT-A திட்டத்தின் மூலம் இவ்வாண்டு இறுதிக்குள் கோவிட் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.