கோலாலம்பூர், நவம்பர்-27, கோவிட்-19 தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவுகள் மற்றும் மரணங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டுமெனக் கூறி, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் WHO எனப்படும் உலக சுகாதார நிறுவனத்திடம் 60 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி, 8 மலேசியர்கள் வழக்குத் தொடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர்கள் தான் ஸ்ரீ முஹிடின் யாசின், டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப், சுகாதார அமைச்சு, மலேசிய அரசாங்கம், WHO தலைமை இயக்குநர் Tedrod Ahanom Ghebreyesus உள்ளிட்ட 25 பேரை பிரதிவாதிகளாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிப்ளி அஹ்மாட், முன்னாள் அமைச்சர்கள் Dr அடாம் பாபா, கைரி ஜமாலுடின், சுகாதார முன்னாள் தலைமை இயக்குநர் தான் ஸ்ரீ Dr நூர் ஹிஷாம் அப்துல்லா உள்ளிட்டவர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
நான்காண்டுகளுக்கு முன்னர் கோவிட்-19 பரவல் உச்சக்கட்டத்திலிருந்த போது, தடுப்பூசிப் போடுமாறு அரசாங்கம் போட்ட உத்தரவால், தாங்கள் பக்க விளைவுகளுக்கு ஆளானதாக அந்த 8 பேரும் வழக்கு மனுவில் குறிப்பிட்டனர்.
2 முறை Sinovac தடுப்பூசிகளையும் ஒரு தடவை Pfizer ஊக்கத் தடுப்பூசியையும் போட்ட பிறகு தனது தந்தை மரணமடைந்ததாகப் புகார் கூறிய, ஜோகூர் மூவாரைச் சேர்ந்த ஒருவரும் அவர்களில் அடங்குவார்.
இழப்பீடு தவிர, கோவிட்-19 உண்மையில் ஒரு நோயே அல்ல, பருவ கால காய்ச்சலை ஒத்திருப்பது போன்று மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஓர் உயிரியில் ஆயுதம் என நீதிமன்றம் அறிவிக்க வேண்டுமென்றும் அந்த 8 பேரும் கோரியுள்ளனர்.
வழக்கு அடுத்தாண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி செவிமெடுப்புக்கு வருகிறது.