லண்டன், ஏப்ரல் 30 – தனது தயாரிப்பிலான கோவிட்-19 தடுப்பூசிகள், அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதை முதல் முறையாக நீதிமன்ற ஆவணங்கள் வாயிலாக, மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா ஒப்புக் கொண்டுள்ளது.
அந்த ஒப்புதல் வாக்குமூலம், லட்சக் கணக்கான சட்டப்பூர்வ இழப்பீட்டிற்கு நேரடியாக வழிவகுக்கும்.
இதுவரை அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் தொடர்பில், 51 வழக்குகள் நிலுவையில் இருக்கு வேளை ; அவை 100 மில்லியன் யூரோ அல்லது 50 கோடி மலேசிய ரிங்கிட்டுக்கும் கூடுதலான இழப்பீட்டு தொகையை உட்படுத்தியவை ஆகும்.
மருந்தக ஜாம்பவானான அஸ்ட்ராஜெனெகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன், இணைந்து உருவாக்கிய தடுப்பூசி, கடுமையான காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் ஆற்றல் உடையது என, டஜன் கணக்கான வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
எனினும், மிகவும் சிறிய எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே அது மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தி இருப்பதாகவும், கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து அது கோடிக் கணக்கான மக்களை காப்பாற்ற உதவி உள்ளதாகவும், அஸ்ட்ராஜெனெகாவின் வழக்கறிஞர் தற்காத்து பேசியுள்ளார்.
2021-ஆம் ஆண்டு, அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை போட்டுக் கொண்ட பின்னர், மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட, இரு பிள்ளைகளுக்கு தந்தையான Jamie Scott என்பவர், அந்நிறுவனத்திற்கு எதிராக முதல் வழக்கை தொடுத்துள்ளார்.
அந்த வழக்கிற்கு அஸ்ட்ராஜெனெகா எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், முதல் முறையாக தடுப்பூசிகளால் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளது.
எனினும், மிகவும் அரிதாக சிலருக்கு மட்டுமே அந்த பக்க விளைவுகள் ஏற்படும் எனவும் அஸ்ட்ராஜெனெகா தற்காத்து பேசியுள்ளது.