ஷா ஆலாம், ஜூன்-23, நீதிமன்றங்களில் அரிதாக நடக்கும் சம்பவமாக, சிலாங்கூர் ஷா ஆலாமில் இந்திய பிரஜை ஒருவர் கொலைக் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
தனக்காக வாதாட நீதிமன்றமே வழக்கறிஞரை நியமித்த போதும், 4 ஆண்டுகளுக்கு முன்னர் முதியோர் இல்லமொன்றில் சக நாட்டவரைக் கொலைச் செய்த குற்றத்தை கே.அழகேசன் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து 32 வயது அவ்வாடவருக்கு ஷா ஆலாம் உயர்நீதிமன்ற நீதிபதி 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அவருக்கு 15 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
கட்டாய மரண தண்டனை அகற்றப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, கொலையாளிக்கு அந்த உச்சப்பட்ச தண்டனையை வழங்குவதாக நீதிபதி சொன்னார்.
2019-ல் வேலை தேடி மலேசியா வந்த அழகேசன், 2020-ல் செப்டம்பரில் அக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள முதியோர் இல்லத்தில் வைத்து சுகன் கணேசன் என்பவரை தலையில் சுத்தியலால் தாக்கி அழகேசன் கொன்றார்.
அவ்விரு இந்தியப் பிரஜைகளும் சம்பவத்தின் போது எதற்காக அம்முதியோர் இல்லத்தில் இருந்தார்கள் என்பது இதுவரைத் தெரியவில்லை.