
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்டு 28 – கடந்த மாதத் தொடக்கத்தில், அலுவலக பணியாளர் ஒருவரை கொலை செய்து, அவரது உடலை சாக்குப் பையில் கட்டி, பாழடைந்த கிடங்கில் வீசிய குற்றாச்சாட்டு தொடர்பில், மேலும் ஒரு நபருக்கு எதிரான இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், 43 வயது எஸ். துரைராஜ் எனும் அவ்வாடவன், தமக்கு எதிரான அந்த கொலைக் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினான்.
லோரி ஓட்டுனரான, துரைராஜ், இதர மூவருடன் இணைந்து, இந்திய நாட்டவரான 41 வயது ஏ.விநாயகமூர்த்தியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆகஸ்ட்டு நான்காம் தேதி, பிற்பகல் மணி 1.30 வாக்கில், ஸ்ரீ கெம்பாங்ஙான், தாமான் புக்கிட் செர்டாக்கில், அவர்கள் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 30 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.
பத்தாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையில் துரைராஜை விடுவிக்க இன்று நீதிமன்றம் அனுமதி வழங்கிய வேளை ; வழக்கு முடியும் வரையில், மாதம் ஒரு முறை அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று துரைராஜ் கையெழுத்திட வேண்டும் எனும் கூடுதல் நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை, செப்டம்பர் 19-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.
முன்னதாக, ஆகஸ்ட்டு 16-ஆம் தேதி, அதே கொலை தொடர்ப்பில், 51 வயது நந்த குமார், அவரது இரு மகன்களான 24 வயது மிரேன் ராம், 22 வயது கிரிதிக் ராம் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்ட வேளை ; அதனை மறுத்து அவர்கள் விசாரணை கோரினர்.
முன்னதாக, நிறுவனத்திற்கு சொந்தமான லட்சக்கணக்கான ரிங்கிட் பணம் கையாடல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில், விநாயகமூர்த்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.