
பினாங்கு, ஜோர்ஜ் டவுனிலுள்ள, லெபுச் சூலியாவில், நேற்று சண்டையில் ஈடுபட்டதாக நம்பப்படும், 56 வயது உள்நாட்டு ஆடவன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.
நேற்றிரவு மணி 8.35 வாக்கில் நிகழ்ந்த அந்த சண்டையின் போது, அவ்வாடவனை கைது செய்ய முற்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவரை, அவன் கடுஞ்சொற்களை கொண்டு திட்டியதோடு, அவருக்கு காயம் விளைவித்ததையும், தீமோர் லாயுட் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் சோபியான் சந்தோங் உறுதிப்படுத்தினார்.
ஆடவன் ஒருவன், பொதுமக்களை தாக்குவதோடு, கார்களை குத்தி சேதப்படுத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவ்வாடவனை கைது முற்பட்ட போது தாக்குதலுக்கு இலக்காகி முகம் மற்றும் கையில் காயமடைந்ததாக, சோபியான் சொன்னார்.
சம்பந்தப்பட்ட ஆடவன் போதைப் பொருள் உட்கொண்டிருந்தது சிறுநீர் பரிசோதனையில் தெரிய வந்த வேளை ; விசாரணைக்கு உதவும் பொருட்டு அவன் நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.
முன்னதாக, மது போதையில் இருந்த ஆடவன் ஒருவன், பொதுமக்களை தாக்குவதோடு, கார்களை குத்தி சேதப்படுத்தும் ஏழு வினாடி காணொளி ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.