
கோலாலம்பூர், மார்ச் 7 – நாடு, MCO – மக்கள் நடமாட்ட கால கட்டத்தில் இருந்தபோது, அப்போதைய கூட்டரசு பிரதேச துணையமைச்சர் எட்மண்ட் சந்தாரா , 55 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு நியு சிலாந்தில் உள்ள தனது குடும்பத்தினரைப் பார்க்கச் சென்றது தார்மீக ரீதியாக சரியில்லை என, முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறியுள்ளார்.
தற்போது PBM – Parti Bangsa Malaysia கட்சியின் உறுப்பினராக இருக்கும் சந்தாரா, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் மீது சுமத்தியிருக்கும் அவதூறு வழக்கு இன்று கோலாலம்புர் சேஷன் நீதிமன்றத்தில் செவிமடுக்கப்பட்டது.
அந்த வழக்கில், பிரபாகரனின் சார்பில் சாட்சியாளராக நஜீப் வாக்குமூலம் அளித்தார்.
தமது வாக்குமூலத்தின் போது, அப்போது செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த சந்தாரா , ஒரு நல்ல முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டுமென கூறினார்.
ஒருவர் அமைச்சரவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் பட்சத்தில் , தங்களது பணிகளுக்காக சில தியாகங்களைச் செய்ய தயாராக இருக்க வேண்டும். சொந்த குடும்ப உறுப்பினர்களைக் காட்டிலும் நாட்டு மக்களின் மீது அவர்கள் கூடுதல் அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்பு சந்தாரா, நியூ சிலாந்திலுள்ள தமது குடும்பத்தினரைச் சென்றுப் பார்க்க புத்ராஜெயாவிடமிருந்து தமக்கு 55 நாட்கள் விடுமுறை கிடைத்திருந்ததாக கூறியிருந்தார்.
அதையடுத்து, 55 நாட்கள் விடுமுறை கிடைத்திருந்தாலும், MCO கால கட்டத்தில் மக்கள் மாநிலம் கடக்கவும், வெளிநாடுகளுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் அத்தனை நாட்களுக்கு வெளிநாட்டிற்கு விடுமுறை சென்றிருப்பது முறையல்ல என நஜிப் குறிப்பிட்டார்.