கோத்தா கினாபாலு, ஆகஸ்ட்-18 – மலேசிய இந்து சங்கத்தின் சபா கிளை ஏற்பாட்டில் கோத்தா கினாபாலுவில் இந்து ஈமச்சடங்கு பயிற்சி பட்டறை வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது.
தொழில்முனைவோர் – கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு மற்றும் இந்து ஆலயங்கள் ஒத்துழைப்பில் ஸ்ரீ பசுபதிநாத் கோயில் மண்டபத்தில் அப்பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
சண்டாகான், தாவாவ், லாஹாட் டத்து, கெனிங்காவ், லாபுவான் உள்ளிட்ட இடங்களிலிருந்து 40 பேர் அதில் பங்கேற்றனர்.
இந்து சமயச் சடங்குகளை நடத்துவதற்குத் தேவையான அறிவு, தெளிவு, திறன் ஆகியவற்றை சபாவில் உள்ள இளையத் தலைமுறையினருக்குக் கொண்டுச் செல்வதை அப்பயிற்சிப் பட்டறை நோக்காகக் கொண்டிருந்தது.
அப்பயிற்சிப் பட்டறையை நனவாக்குவத்தில் தொழில் முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு வழங்கிய ஒத்துழைப்பு இன்றிமையாதது என, மலேசிய இந்து சங்கத்தின் சபா மாநில தலைவர் டத்தோ டாக்டர் கே.மாதவன் தமதுரையில் குறிப்பிட்டார்.
முதன்மைப் பயிற்சியாளராக பட்டறையை வழிநடத்திய சிவஸ்ரீ டாக்டர் ஏ.எல்.ஆனந்த் கோபி சிவாச்சாரியார், இந்து பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு போன்ற அம்சங்கள் குறித்த அறிவும், தெளிவும் அழிந்து விடும் அபாயமுள்ள சபா போன்ற இடங்களில், இது போன்ற பட்டறைகள் நலன் பயக்குமென்றார்.