கோத்தா கினபாலு, அக் 16 – 650,000 ரிங்கிட்டிற்கும் மேலாக போலி பணக் கோரிக்கை தொடர்பில் ஒரு தம்பதியரான கணவன் மனைவியை சபா
MACC அதிகாரிகள் கைது செய்தனர். Sabah Electricity Sdn Bhd (SESB) நிறுவனத்திற்கு 650,000 ரிங்கிட்டிற்கும் மேலாக டீசல் எண்ணெய் விநியோகித்தது தொடர்பில் தனியார் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி மற்றும் தலைமை செயல் முறை அதிகாரியுமான 50 முதல் 60 வயதுடைய அந்த தம்பதியர் கைது செய்யப்பட்டதாக எம்.ஏ.சி.சிக்கு அணுக்கமான வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.
அந்த இருவரும் பொய்யான 15 பணக் கோரிக்கைகளை 2013ஆம் ஆண்டு வாக்கில்
செய்ததாக கூறப்பட்டது. அந்த தம்பதியர் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்திற்கு மின்சார இயந்திரத்திற்கு டீசல் விநியோகிக்கும் குத்தகையையும் பெற்றிருந்தனர்.
உண்மையில் அவர்கள் செய்திருந்த பணக் கோரிக்கைக்கு ஏற்ப அந்த நிறுவனத்திற்கான எண்ணெய் விநியோகம் செய்யவில்லை. சபா எம்.ஏ.சி.சி அலுவலகத்திற்கு வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை மணி 10.55 அளவில் அந்த இரு சந்தேகப் பேர்வழிகளும் வந்தபோது கைது செய்யப்பட்டனர். இதனிடையே அவர்கள் கைது செய்யப்பட்டதை சபா எம்.ஏ.சி.சி இயக்குனர் டத்தோ S . கருணாநிதி ( Karunanithy ) உறுதிப்படுத்தினார்.
குற்றவியல் சட்டத்தின் 471 ஆவது விதியின்கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். குற்றச்சாட்டு கொண்டுவருவதற்கான நடைமுறைகளுக்காக அந்த இருவரும் வியாழக்கிழமை தாவாவ் லஞ்ச ஊழல் சிறப்பு நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்படுவார்கள் என்றும் கருணாநிதி தெரிவித்தார்.