
ஷா ஆலம், ஆக 30- சிலாங்கூரில் உள்ள தாபிஸ் மையங்கள் மற்றும் தனியார் சமயப் பள்ளிகள் மூடப்பட்டதாகக் கூறப்படும் அவதூறு தொடர்பான விசாரணையை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை மேற்கொண்டு வருகிறது. இந்த அவதூறு தொடர்பாக பேராக் மாநிலத்தில் மூன்று புகார்களை போலீஸ் பெற்றுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இதன் தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளது. பேராக்கில் கிடைத்த புகார்களின் பேரில் 1948ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் புக்கிட் அமான் விசாரணையைத் தொடக்கியுள்ளது என்று அவர் கூறினார்.
சமயப் பள்ளிகளுக்கு எதிராக அவதூறு பரப்பும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் நேற்று காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இது போன்ற பொய்யானக் குற்றச்சாட்டுகள் பெற்றோர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதோடு மாநிலத்தில் உள்ள சமய கல்வி நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கையை சிதைத்துவிட்டது என அவர் கூறியிருந்தார். இத்தகைய அவதூறுகளைப் பரப்பும் கும்பல்களை உடனடியாக கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.