ஜோகூர் பாரு, டிச 30 – பல மடங்கு லாபம் கிடைக்கும் என சமூக வலைத்தளத்தில்
வெளியான முதலீட்டு விளம்பரத்தினால் ஈர்க்கப்பட்ட குழாய் பழுதுபார்க்கும் பணியாளர் ஒருவர் தனது சேமிப்பு தொகையான 142,720 ரிங்கிட்டை இழந்தார்.
கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளியான முதலீடு விளம்பரத்தைக் கண்டு 54 வயதுடைய அந்த ஆடவர் பணத்தை பறிகொடுத்ததாக தென் ஜோகூர் பாரு வட்டார போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ரவுப் செமாட் ( Raub Selamat ) தெரிவித்தார்.
அந்த விளம்பரத்தில் காணப்பட்ட செயலியை அழுத்தியவுடன் WhatsApp தொடர்பு கிடைத்ததாகவும் அதன் பின் தம்மை ஆடவர் ஒருவர் தொடர்பு கொண்டு தாம் செய்யும் முதலீட்டிற்கு 400 விழுக்காடு லாபம் கிடைக்கும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கட்டம் கட்டமாக நவம்பர் 4 ஆம் தேதிக்கும் டிசம்பர் 21 ஆம் தேதிக்குமிடையே ஆறு வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 16 முறை 142,720 ரிங்கிட்டை பட்டுவாடா செய்ததாக பாதிக்கப்பட்ட அந்த ஆடவர் புகார் செய்துள்ளார்.
லாபத்தை மீட்டுக்கொள்ள முயன்றபோது மேலும் 47,000 ரிங்கிட்டை முதலீடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து தாம் ஏமாற்றப்படுவதாக உணர்ந்து அந்த ஆடவர் போலீசில் புகார் செய்ததாக ரவுப் செலமாட் கூறினார்.