காபூல், டிசம்பர்-31 பெண்கள் விஷயத்தில் அடுத்த அதிரடியாக, புதியக் குடியிருப்புக் கட்டடங்களிலும் சமையலறைகளிலும் ஜன்னல்கள் இருக்கக் கூடாது என தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தானிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
சமையலறைகளில் அல்லது வீட்டு முற்றங்களில் பெண்கள் வேலை செய்யும் போதோ அல்லது கிணறுகளிலிருந்து தண்ணீர் சேகரிக்கும் போதோ அவர்களைப் பார்ப்பது, ஆபாச செயல்களுக்கு வழிவகுத்து விடுமாம்.
தாலிபான் அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் Zabihullah Mujahid-டின் அந்த விளக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜன்னல்கள் வைக்கப்படாதிருப்பதை உறுதிச் செய்ய, ஊராட்சி மன்ற அதிகாரிகளே கட்டுமானத் தளங்களை நேரில் சென்று கண்காணிக்க வேண்டும்.
பக்கத்து வீட்டினுள் மக்கள் எட்டிப் பார்க்காமலிருப்பதை அதிகாரிகள் உறுதிச் செய்வார்கள் என Zabihullah சொன்னார்.
ஒருவேளை, கட்டுமானத்திலிருக்கும் குடியிருப்புகளில் ஜன்னல்கள் ஏற்கனவே வைக்கப்பட்டு விட்டால், அதை அப்படியே விட்டு விடக் கூடாது;
மாறாக, குறுக்கே ஒரு சுவர் கட்ட வேண்டும் அல்லது ஜன்னலை நிரந்தரமாக மூடி விட வேண்டுமென உத்தரவு வெளியாகியுள்ளது.
ஜன்னல் வழியாகப் பெண்களைப் பார்ப்பதைத் தடுப்பதன் மூலம் அண்டை வீட்டாருக்கு ஏற்படும் ‘தொல்லைகளைத்’ தவிர்க்க முடியும் என விளக்கம் கூறப்பட்டுள்ளது.
இவ்வேளையில், ஆப்கானிஸ்தானில் அனைத்து அரசு சார்பற்ற அமைப்புகளும் பெண்களை வேலைக்கமர்த்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
மீறினால், அவர்களின் உரிமம் இரத்துச் செய்யப்படுமென, ஆப்கானிஸ்தான் பொருளாதார அமைச்சர் தெரிவித்தார்.
பெண் ஊழியர்கள், தலை முக்காடை முறையாக அணிவதில்லை மற்றும் இஸ்லாமிய ஆடைக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதில்லை எனக் கூறி, அவர்களை பணி இடைநீக்கம் செய்யுமாறு உத்தரவிட்ட ஈராண்டுகளுக்குப் பிறகு, இப்புதிய உத்தரவை அது பிறப்பித்துள்ளது.