கெமாமான், ஆகஸ்ட்-26 – நடந்து முடிந்த சரவாக் சுக்மா போட்டியில் திரங்கானுவைப் பிரதிநிதித்து முஸ்லீம் பெண்கள் இருவர் முக்குளிப்புப் போட்டியில் பங்கேற்றதாக வெளியான செய்தி குறித்து, மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஒருவர் அதிர்ச்சித் தெரிவித்தார்.
முக்குளிப்புப் போட்டிக்குப் பயன்படுத்தும் உடைகள் முஸ்லீம் விளையாட்டாளர்களுக்கான ஆடை கோட்பாடுகளைப் பின்பற்றியிருக்கவில்லை.
எனவே, முக்குளிப்புப் போட்டியில் திரங்கானுவைப் பிரதிநிதித்து எந்தவொரு முஸ்லீம் பெண்ணும் பங்கேற்கக் கூடாதென்பதே மாநில விளையாட்டு மன்றத்தின் நிலைப்பாடாகும்.
ஆனால், முஸ்லீம் அல்லாத பெண்கள் அதில் பங்கேற்பதில் ஆட்சேபமில்லை.
இந்நிலையில் அந்த 2 பெண் விளையாட்டாளர்களும் எப்படி சுக்மாவில் பங்கேற்றார்கள் என்பது தமக்கு வியப்பாக இருப்பதாக, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பான ஆட்சிக் குழு உறுப்பினர் ஹிஷாமுடின் அப்துல் கரிம் (Hishamudidn Abdul Karim) கூறினார்.
அது குறித்து விரிவான அறிக்கை அனுப்புமாறு மாநில விளையாட்டு மன்றம் பணிக்கப்பட்டுள்ளது.
அதோடு போட்டியாளர்களை அனுப்பியதாகக் கூறப்படும் திரங்கானு அமெச்சூர் நீச்சல் சங்கமும் விளக்கமளிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விளக்கம் கிடைத்தப் பிறகு நடவடிக்கை குறித்து முடிவாகுமென்றார் அவர்.
இதே காரணத்திற்காக ஏற்கனவே ஜிம்னாஸ்டிக் போட்டியிலும் திரங்கானு பெண்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.