குவாலா திரங்கானு, ஆகஸ்ட் -27 – மாநில அரசின் அனுமதியின்றி முஸ்லீம் பெண்கள் இருவரை சரவாக் சுக்மா போட்டியின் முக்குளிப்புப் பிரிவில் பங்கேற்க வைத்ததற்காக, திரங்கானு அமெச்சூர் நீச்சல் சங்கம் மன்னிப்புக் கோரியுள்ளது.
மாநில அரசின் கட்டுப்பாடுகள் குறித்து நன்கறிந்த போதிலும், தேசிய மற்றும் அனைத்துலக நீச்சல் சம்மேளனங்கள் நிர்ணயித்துள்ள ஆடை கோட்பாடுகளும் ஏற்புடையவையே என்ற எண்ணத்தில் அவர்களைப் போட்டிக்கு அனுப்பினோம்.
எனவே சரியாக புரிந்துகொள்ளாமல் நடந்த தவறுக்கு முழு பொறுப்பேற்றுக் கொள்வதாக அச்சங்கத்தின் தலைவர் Toh Chin Yaw கூறினார்.
சொந்த முயற்சியில் இருவரையும் போட்டிக்கு அனுப்பி வைத்தோம்.
அதற்கானச் செலவை சங்கமும் போட்டியாளர்களின் குடும்பங்களும் பகிர்ந்துக் கொண்டோம் என்றார் அவர்.
மாநில அரசின் கட்டுப்பாடுகளையும் மீறி 2 முஸ்லீம் பெண்கள் சரவாக் சுக்மா போட்டியில் பங்கேற்றது முன்னதாக சர்சையானது.
முக்குளிப்புப் போட்டிக்குப் பயன்படுத்தும் உடைகள் முஸ்லீம் விளையாட்டாளர்களுக்கான ஆடை கோட்பாடுகளைப் பின்பற்றியிருக்கவில்லை.
எனவே, முக்குளிப்புப் போட்டியில் திரங்கானுவைப் பிரதிநிதித்து எந்தவொரு முஸ்லீம் பெண்ணும் பங்கேற்கக் கூடாதென்பதே மாநில விளையாட்டு மன்றத்தின் நிலைப்பாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.