
ரியாத், நவம்பர் 6 – சவுதி அரேபியாவின், தெற்கு நகரமான அல்-உலாவில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு, சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகள் பழமையான கைக் கோடாரியைக் கண்டெடுத்துள்ளது.
கராஹ்வில் ‘Qarah’, பண்டைய மனிதன் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, அவர்கள் அந்த கோடாரியை கண்டுபிடித்தாக கூறப்படுகிறது.
இஸ்லாமிய நாகரீகத்தின் முதல் நூற்றாண்டில், அரேபிய தீபகற்பத்தில் தோன்றிய முக்கியமான குடியிருப்பு பகுதியாக கராஹ் கருதப்படுகிறது.
அதோடு, வரலாற்று சிறப்புமிகுந்த பல முக்கியமான தொல்பொருள் தளங்களையும் அது உள்ளடக்கியுள்ளது.
51 செண்டிமீட்டர் நீளமுள்ள அந்த கோடாரியின், ஒவ்வொரு புறமும் நன்கு கூர்மைப்படுத்தப்பட்டுள்ளன. அது, அதி பேலியோலிதிக் ‘Paleolithic’ மனிதன் வாழ்ந்த காலத்தில் தயாரிக்கப்பட்டது என நம்பப்படுகிறது.
இதுவரை கராஹ் பகுதியிலிருந்து 12-க்கும் அதிகமான கற்களால் ஆன கருவிகள் அடையாளம் காணப்பட்டுள்ள வேளை; அவை எவ்வாறு தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து அறிய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன