சாங்கி விமான நிலையத்தில் ஸ்லைடில் சவாரி செய்தபோது பெண்ணுக்கு வலது காலில் இரு எலும்புகள் முறிவு
சிங்கப்பூர், நவ 6 – சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் 4 ஆவது முனையத்தில் அமைந்துள்ள டியூப் ஸ்லைடு ( Tube Slide ) சவாரியில் தனது நண்பர்களுடன் ஈடுபட்ட மலேசிய பெண் தனது வலது காலில் இரு எலும்புகள் முறிவுக்கு உள்ளானதோடு அதனால் ஏற்பட்ட மருத்துவ செலவுக்காக 1,850 ரிங்கிட் செலவு செய்ய வேண்டிய நிலைமைக்கு உள்ளானார்.
சிங்கப்பூருக்கு மூன்று நாள் மேற்கொண்ட பயணத்தை முடித்துக்கொண்டு மலேசியாவுக்கு திரும்புவதற்கு நவம்பர் 4ஆம் தேதி விமான நிலையத்தில் காத்திருந்தபோது போதுமான நேரம் இருந்ததால் ஜாலியாக நண்பர்களுடன் Tube Slide சவாரியில் ஈடுபட்டபோது Z என அடையாளம் கூறிக்கொண்ட அந்த பெண் காலில் காயம் அடைந்ததால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.
Slideடின் திருப்பங்கள் மிகவும் ஆபத்தானதாக இருந்ததால் உராய்வு காரணமாக அவரது கெண்டைக் காலின் தசைகளில் கடுமையாக வலி ஏற்பட்டதை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சிங்கப்பூர் பொது மருத்துமனையில் அப்பெண் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் வலது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவை குணப்படுத்துவதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளானதோடு காலில் ஏற்பட்ட வீக்கம் குறைவதற்கு ஐந்து முதல் ஏழு நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலைக்கும் அவர் உள்ளானார்.