கோலாலம்பூர், மே-7, சாதிக்கத் துடிப்பவர்களுக்கு சாக்குப் போக்கு எல்லாம் செல்லாக் காசு என்பதை நிரூபித்து, அனைவரும் முன்மாதிரியாகக் கொள்ளும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் மலேசியப் பெண் அருளினி அஷ்வினா ஆறுமுகம்.
தமிழகத்தின் பிரபல Zee தொலைக்காட்சியின் சரிகமப பாடல் திறன் போட்டிக்குத் தேர்வாகி நமக்கெல்லாம் 22 வயது அருளினி பெருமைச் சேர்ந்துள்ளார்.
நிகழ்ச்சி மேடையில், தான் autism மதியிறுக்கக் குறைபாடு கொண்டவர் என அருளினியே சொல்லும் வரை, எவராலும் அதைக் கண்டு பிடித்திருக்க முடியாது.
அந்த அளவுக்கு அவரின் பாடும் திறன் நீதிபதிகளாலும் பார்வையாளர்களாலும் மெச்சப்பட்டது.
Autism குறைபாட்டால் 7 வயதில் தான் பேசவே தொடங்கியதாகவும், அன்று முதல் இன்று வரை இசையே தனக்கு உற்றத் துணையாக இருந்து வருவதாகவும் ஜொகூரைச் சேர்ந்த அருளினி மேடையில் கூறி, நீதிபதிகளையே அதிர்ச்சியடைய வைத்தார்.
எப்படி இசை தனக்கு உற்சாகமூட்டியதோ, அதே உற்சாகத்தை தன்னைப் போன்ற குறைபாடு கொண்டவர்களுக்கு தந்திடுவதை அருளினி இலக்காகக் கொண்டுள்ளார்.
“ சரிகமப நிகழ்ச்சியில் வெற்றிப் பெறுவது முக்கியமல்ல; நான் கடந்து வந்தப் பாதையில் உள்ள மற்ற குழந்தைகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன். ஒட்டு மொத்த சமூகத்துக்கும் ஒரு தூண்டுகோலாக இருக்க ஆசைப்படுகிறேன்” என அருளினி தனது மனக்கிடங்கைக் கொட்டிய போது, கைத்தட்டாதவர்கள் எவருமில்லை.
கடவுளின் குழந்தையான அருளினி, இந்த சரிகமப நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோருக்கு இனி முன்மாதிரியாக வலம் வருவார் என சரிகமப போட்டியின் நீதிபதிகளே மனதார பாராட்டி ஆசி வழங்கினர்.
2022-ஆம் ஆண்டுக்கான ஆஸ்ட்ரோவின் Big Stage நிகழ்ச்சியில் வாகை சூடியவர் தான் இந்த அருளினி என்பது குறிப்பிடத்தக்கது.
நம்மில் பலருக்கு எல்லாம் இருந்தும், வாழ்க்கையில் முன்னேற முடியாமல் இருப்பதற்கு பல்வேறு சாக்குப் போக்குகளை கைவசம் வைத்திருப்போம்.
ஆனால், அருளினியின் மனத்திடமும், சாதிக்க வேண்டும் என்ற வேட்கையும் இருந்தால் நம்மாலும் சாதிக்க முடியும் என்பதை மனதில் கொள்வோம்.