
கோலாலம்பூர், செப்டம்பர் 28 – அண்மையில், தனது ஆண் நண்பருடன் சாப்பிட வெளியே சென்ற பதின்ம வயது பெண் ஒருவர், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின், அவசர கதவு படிக்கட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இம்மாதம் 18-ஆம் தேதி, இரவு மணி 9.10 வாக்கில்,14 வயதான அந்த யுவதி, தனது 18 வயது ஆண் நண்பருடன் வெளியே சென்ற போது, அச்சம்பவம் நிகழ்ந்தது.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அப்பெண், கட்டடத்தின் அவசர படிகட்டு பகுதியில், கதவு பூட்டப்பட்டு கற்பழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர், அப்பெண்ணை அவரது வீட்டிலேயே கொண்டு விட்ட அவ்வாடவன், அச்சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது என சொல்லி விட்டு சென்றுள்ளான்.
அச்சத்தில் இருந்த அப்பெண், பின்னர் அது குறித்து தனது மற்றொரு நண்பரிடம் கூறவே, அவர் அப்பெண்ணின் குடும்பத்தாரை தொடர்புக் கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, இம்மாதம் 21-ஆம் தேதி, அப்பெண் அவரது குடும்பத்தாருடன் போலீஸ் புகார் செய்ததாக கூறப்படுகிறது.
இவ்வேளையில், அந்த யுவதியை கற்பழித்த ஆடவன் விசாரணைக்கு உதவும் பொருட்டு கைதுச் செய்யப்பட்டுள்ளதை, புக்கிட் அமான் மகளிர் – சிறார் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குனர் அசிஸ்டன் கமிஸ்னர் சித்தி கம்சியா ஹசான் உறுதிப்படுத்தினார்.