Latestஉலகம்

சாமியார் நித்தியானந்தா இறந்து விட்டாரா? வைரல் தகவல் குறித்து கைலாசா பரபரப்பு விளக்கம்

கைலாசா, ஏப்ரல்- 2 – சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா உயிரிழந்து விட்டதாக நேற்று காலை முதலே தகவல் பரவி வருகிறது.

தொடக்கத்தில் அது april fool நகைச்சுவையாக இருக்குமோ என பலர் நினைத்திருந்த நிலையில், பின்னர் இந்தியத் தகவல் ஊடகங்களும் அது குறித்து செய்தி வெளியிட விவகாரம் பரபரப்பு ஆனது.

2 நாட்களுக்கு முன்பு நித்யானந்தா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், அவர் உயிரிழந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

நித்யானந்தாவின் சகோதரி மகனே வீடியோ வாயிலாக “இந்து தர்மத்தைக் காப்பதற்காக நித்யானந்தா உயிர் தியாகம் செய்து சமாதி அடைந்து விட்டார்” என அறிவித்தது, அவரின் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் அது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

”பகவான் நித்யானந்தா இறக்கவில்லை; அவர் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், உயிருடனும், உத்வேகத்துடனும் இருப்பதாக கைலாஸா உறுதியாக அறிவிக்கிறது” என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

அவர் இறந்து விட்டதாக இந்து விரோத ஊடகங்கள் பொய் தகவல் பரப்புகின்றன; அதனைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

உண்மையில் மார்ச் 30-ஆம் தேதி நித்யானந்தா உகாதி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு அனைத்து பக்தர்கள், சீடர்கள் மற்றும் 2 பில்லியன் இந்து பக்தர்களுக்கும் ஆசீர்வாதம் அளித்தார்.

அந்த உரையின் நேரலை எனக் கூறி ஒரு link இணைப்பும் அச்செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலியல் மற்றும் கடத்தல் வழக்குகளில் கர்நாடகா மற்றும் அகமதாபாத் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா, சில வருடங்களுக்கு முன்பு வெளிநாடு தப்பிச் சென்றார்.

இந்துக்களுக்காக ஒரு நாட்டை உருவாக்குவதாகக் கூறிக் கொண்டு, இக்குவாடோர் நாட்டுக்கு அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு ‘கைலாசா நாடு’ எனப் பெயரிட்டார்.

இல்லாத ஒரு நாட்டுக்கு தனிக் கொடி, கடப்பிதழ், நாணயங்கள், அனைத்துலகத் தூதர்களை அறிவித்து, அங்கு குடியேற மக்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிக்கையெல்லாம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அங்கிருந்தவாறே சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளியிட்டு தனது இருப்பைக் காட்டி வந்தவர், சில தினங்களாகஜக் கண்ணில் படாததால், அவர் மரணித்து விட்டதாக இந்த வதந்தி எழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!